”போதிதர்மர், நோக்குவர்மம்” என காதில் விழுந்த டிரைய்லர் சொற்களால் ஈர்க்கப்பட்டு ‘அட இது நம்ம படம் போல இருக்கே!’ என்ற ஆர்வத்தில் திரைக்கு வந்த இன்றே பார்த்துவிட வேண்டும் என்று, இன்னொரு தமிழார்வ நண்பரையும் இணைத்துக் கொண்டு, “தீபாவளியும் அதுவுமா..வீட்ல இருக்காம?” என்ற மனைவியையும் முறைத்துக் கொண்டு, 7ம் அறிவைப் பார்த்தோம்.
அழிந்து போன தமிழருக்காகவும் அழியாத தமிழுக்காகவும் அர்ப்பணித்து ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யாவை வைத்து எடுத்துள்ள மாபெரும் திரைப்படம் ஏழாம் அறிவு.
தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவரின் புதல்வியாய் சுருதி, தற்போதைய ஜெனிடிக் எஞ்சினியரிங் மூலம், மூத்த தமிழன் போதிவர்மனின்(சூர்யா) ஆற்றலை மீட்டெடுத்து, நம் மூலிகை மருந்துகளால் நாட்டு மக்களையும், நம் வர்ம-களரிக் கலையால் நாட்டையும் காக்கும் படம் 7ம் அறிவு.
தமிழனின் தன்னிகரற்ற அறிவை, ஆற்றலை இவ்வளவு தெளிவாகச் சொன்னமைக்கு முதலில் கை கொடுங்கள் முருகதாஸ்!
மகேந்திரவர்ம பல்லவனின் புதல்வனால் இங்கிருந்த களரியும் வர்ம்மும் சீனத்துக்குப் போய் குங்ஃபூவாகவும் கராத்தேயாகவும் ஆனது என்று திரையுலகில் முதலில் பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள்.
இங்கிருந்த தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் சீனத்து மருத்துவத்துடன் சேர்ந்து செறிவூட்டப்பட்டது. சீன மருத்துவத்திற்கு மேலான, இணையான மருத்துவ அறிவு தமிழனிடம் இருந்தது என்பதை எடுத்துச் சொன்னமைக்கு தமிழனாய் சித்த மருத்துவனாய் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஈழத்தில் வீழ்த்தப்பட்ட்து தமிழனின் வீரம் தாழ்ந்ததால் அல்ல. 9 நாடுகளின் கூட்டணித் துரோகம் தான் என்பதைச் சொன்னமைக்கும், தமிழ் பேசுவதை தவிர்க்கும்/எதிர்க்கும் மயிர் நரைத்த உள்னாட்டு வெள்ளையரை தோலுரித்தமைக்கும், கூடுதல் நன்றியும் வணக்கமும்.

இவ்வளவு செய்த நீங்கள், கொஞ்சம் அவசரப்பட்டு ஏன் இட ஒதுக்கீடை சாடுகிறீர்கள்? அந்த ஒதுக்கீடு கிடைக்காமல் போனால் இன்னமும் உண்மைத் தமிழனாகிய நீங்களும் நானும் என்ன இப்போது செய்திட முடியும்? கொஞ்சம் மனசாட்சியை மறந்து விட்டீர்களே

சிவப்புத்தோல் சுருதியின் நவீன தமிழும், நோக்குவர்மத்தால் நோகாமல் நொங்கு எடுக்கும் வில்லத்தனமும் கதையின் ஓட்டத்திற்கு கொஞ்சம் ஒட்டமறுப்பதும் மேற்சொன்ன ஒரு சில பிழைகள் தவிர்த்துப் பார்த்தால், 7ம் அறிவு தமிழனின் திரையுலகப் பதிவில் மைல்கல்.
No comments:
Post a Comment