எண்ணூர் அனல்மின் நிலையத்தில், தொழிற்சாலை கழிவு கலந்த தண்ணீரை பயன்படுத்துவதால், மின் நிலைய கருவிகள் வலுவிழந்து விட்டன. இதனால், உற்பத்தி குறைந்து மோசமான நிலையில், மின் நிலையத்தை அரசு பழுதுபார்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மின் நிலையத்திற்கும், சுழலியில் பயன்படுத்த நல்ல தெளிவான நீரும், பாய்லரை குளிர்விக்க சாதாரண நீரும் தேவை.
எண்ணூர் மின் நிலைய சுழலிக்கு, அருகிலுள்ள ஊராட்சிகளிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கொதிகலனை குளிர்விக்க கடலை ஒட்டியுள்ள, கால்வாய் நீர் பயன்படுகிறது. இதில்தான், துவக்கம் முதலே பல பிரச்னைகள் ஏற்பட்டு, இன்னும் தீர்க்கப்படவில்லை.
"கலீஜ்' செய்த பக்கிங்காம் நீர் :
கடல் நீரை பயன்படுத்துவதற்கு, கடலில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்காமல், கடலை ஒட்டி கால்வாய் தோண்டப்பட்டது. இங்கு கடல் அலையால் மணல் குவிந்து, மின் நிலையத்திற்கு தேவையான நீர் எடுக்க முடியாமல் இருந்தது. மணலை தூர் வாரும் பணிகளும் சரிவர நடக்கவில்லை. இதை அடுத்து, எண்ணூர் மின் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாய் உள்ளது, இதில் கடல் நீரை கலந்து கொதிகலனிற்கு எடுத்துக்கொள்ள, கடலில் இருந்து ஒரு கால்வாய் அமைக்கப் பட்டது.
இதனால், மேலும் பல பிரச்னைகள் ஏற்பட்டன. எண்ணூரை சுற்றி, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றின் கழிவு நீர் அனைத்தும், பக்கிங்காம் கால்வாயில் வந்து கலக்கின்றன. இந்த நீரை மின் நிலைய கொதிகலனுக்கு பயன்படுத்தியதால், மின் கருவிகள் நாளடைவில் வலுவிழந்து, உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.
இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரை பயன்படுத்தியதால், பாய்லர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. உற்பத்தி திறன் குறைந்த நிலையில், நிலக்கரியால் பாய்லர்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு, தற்போது அதிக அளவில் எண்ணெய் கலந்து, மின் நிலையம் இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மின்வாரிய உற்பத்தி பிரிவு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: எண்ணூர் நிலைய மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால், பக்கிங்காம் நீரை பயன்படுத்தாமல், கடலின் ஆழப்பகுதியிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வர வேண்டும். வடசென்னை அனல் மின் நிலையத்திற்கும், ஏற்கனவே, பக்கிங்காம் தண்ணீர்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நிலையத்திற்கும் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், பக்கிங்காம் நீரை பயன்படுத்தாமல், கடலுக்குள் குழாய்கள் அமைத்து, அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருகிறோம். அதனால், வடசென்னை அனல்மின் நிலையம், தனது திறனை விட அதிகமாக உற்பத்தி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முடிவு எடுக்குமா அரசு? :
ஒரு மின் நிலையம் அமைக்க நிலக்கரி அனுமதி, சுற்றுச்சூழல் துறை அனுமதி, மத்திய வனத்துறை அனுமதி ஆகியவற்றை பெறுவதில், பல சிக்கல்களும், முதலீடு பிரச்னையும் உள்ள நிலையில், அனைத்து வசதிகளும் கொண்ட மின் நிலையத்தை, ஏதாவது ஒரு காரணம் சொல்லி மூடுவதை விட, அதன் குறைகளை தீர்த்து இயக்குதே அரசின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். பிரச்னைகளை தீர்க்க விரைவில் அரசு முடிவெடுத்தால், மின்கொள்முதலில் தினமும், ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான, 300 மெகாவாட் மின் பற்றாக்குறையை குறைக்க முடியும். இதனால், ஆண்டுக்கு, 2,100 கோடி ரூபாய் மின்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
No comments:
Post a Comment